மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் அறிஞர் அண்ணா தெருவில் குணசுந்தரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரரான முருகன் என்பவருடன் திருப்பாச்சூரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் திருவிழா முடிந்த பிறகு இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காக்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அண்ணன் தங்கை இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கார் ஓட்டுநரான பார்த்திபன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.