விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் தடையை மீறி கல்லட்டி மலைப்பாதையில் வெளி மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை வழியாக வெளியூர் மற்றும் வெளி மாநில பதிவெண் கொண்ட சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையிலிருந்து 20க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வேனில் ஊட்டிக்கு வந்த பொழுது இவர்கள் ஊட்டியை சுற்றிவிட்டு மசினக்குடிக்கு கல்லட்டி மலைப்பாதை வழியாக சென்ற பொழுது 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் அலறிய குரல் கேட்டதையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
இதில் 19 பேர் படுகாயம் அடைந்தனர். பின் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முத்துமாரி என்ற 45 வயது பெண்மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தடை செய்யப்பட்ட பகுதிக்கு வேனில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்த விடுதி உரிமையாளரான வினோத் குமார் மற்றும் அவரின் உதவியாளரை போலீசார் விசாரணை செய்து கைது செய்தனர். மேலும் அதிகாரிகள் விடுதியை ஆய்வு செய்த பொழுது உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததையடுத்து விடுதியை பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் இனி விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஊட்டியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடிக்கும் முதுமலையிலிருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு வெளி மாநில வாகனங்களை இயக்க போலீசார் தடை விதித்திருக்கின்றனர். மேலும் முதுமலை தெப்பக்காடு, மாவனல்லா, கல்லட்டி, தலைகுந்தா உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் இங்கு தடையை மீறி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.