ஏமனின் ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் பல வருடங்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஈரான் அரசு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. மேலும் ஏமன் நாட்டின் அரசாங்கத்திற்கு சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏமனின் அப்யன் மாகாணத்திலுள்ள லவ்டர் நகரத்தில் அரசாங்கத்திற்கு உரிய ஆயுத கிடங்கில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அரசாங்கத்தின் ஆதரவு படையைச் சேர்ந்த ஆறு நபர்கள் பரிதாபமாக பலியாகினர்.
மேலும் 32 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, மீட்புப்படையினர் பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகே இருக்கும் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.