Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடல் சீற்றத்தால்…. அலையில் இழுத்து செல்லப்பட்ட படகு…. கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு….!!

கடல் சீற்றத்தால் அலையில் இழுத்து செல்லப்பட்ட படகை மீட்க சென்ற போது கடலில் தத்தளித்த 7 மீனவர்களை மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டு வருவதால் இந்திய கடல் தகவல் சேவை மையம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருந்தது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன்பிடி உபகரணங்களை கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் கடியபட்டணத்தில் ஏற்பட்ட பயங்கர கடல் சீற்றத்தால் கரையில் நிறுத்தியிருந்த சகாயகுமார் என்பவரின் பைபர் படகை கடல் அலை இழுத்து சென்றது. இதனை பார்த்த சகாயகுமார், விஜயன் மற்றும் மைக்கேல் ஆகியோர் கடலில் குதித்து படகை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் படகு கடலில் மூழ்கியது. இதனை தொடர்ந்து கடலில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் 3 பேரும் கரை சேர முடியாமல் தத்தளித்தனர்.

இதனை பார்த்த சக மீனவர்கள் அவர்களை மீட்க 2 படகுகளில் விரைந்து சென்றனர். அவற்றில் ஒரு படகில் 3 பேரும் மற்றொரு படகில் 4 பேரும் இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட்ட ஒரு படகு அலையில் இழுத்து செல்லப்பட்டு முட்டம் துறைமுகத்தில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 3 பேரும் கரை சேர்ந்தனர். இதனையடுத்து மற்றொரு படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்த 3 பேரையும் மீட்டுக்கொண்டு கரை திரும்ப முயன்றனர். ஆனால் கரையை நெருங்கி வந்த போது அந்த படகு அலையில் சிக்கி கவிழ்ந்ததால் அதில் இருந்த 7 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனையடுத்து கரையில் நின்றிருந்த சக மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை கயிறு மூலம் மீட்டு கரையில் சேர்த்தனர்.

Categories

Tech |