கனடாவின் ரொரன்றோ நகரில் பாதுகாவலர்களாக பணியாற்றுவோர் தாடி வைத்துக்கொள்ளக் கூடாது, முழுமையாக முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதைத் அடுத்து சீக்கிய பாதுகாவலர்கள் பல பேர் வேலை இழந்தனர். சீக்கியர்களைப் பொருத்தவரையிலும் அவர்கள் தாடியை மழிக்கக்கூடாது, முடிவெட்டிக்கொள்ளக்கூடாது என மதரீதியாக அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தாடி வைத்திருப்போர் N95 வகை மாஸ்குகளை அணிவது கடினம் ஆகும். எனவே தாடி வைத்திருப்பவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்க N95 மாஸ்க் அணிய முடியாது என்பதால் இந்திய சீக்கியர்கள் முதலானவர்கள் பணிசெய்ய முடியாத ஒரு சூழல் ஏற்பட்டது.
இதனால் தாடியை எடுக்காத பெரும்பாலான இந்திய சீக்கியர்கள் முதலானோர் வேலை இழந்தார்கள். இந்த நிலையில் உலக சீக்கியர்கள் அமைப்பு (WSO), மத நம்பிக்கைக்காக தாடியை எடுக்காத சீக்கியர்களை வேலையைவிட்டு அகற்றுவது மனித உரிமைகள் மீறல் என கூறி, அதுகுறித்து புகார் ஒன்றை அளித்தது. அதனை தொடர்ந்து ரொரன்றோ நகரம் தாடியை மழிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக வேலை இழந்த பாதுகாவலர்களை உடனே பணிக்கு எடுக்கவேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் கோவிட் பிரச்சினைகள் இல்லாத இடங்களில் அவர்களுக்கு பணி வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.