ஆற்று தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் பகுதியில் திருநாவுக்கரசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(21), ராஜேஷ்(18) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் தினேஷ் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு சிலம்பு பயிற்சி நடத்தி வந்தார். ராஜேஷ் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊரணிபுரத்திற்கு சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் கல்லணை கால்வாய் சைமன் பாலம் பகுதிக்கு சகோதரர்கள் இருவரும் பெரியம்மா மகன்களான திருக்குமரன், திருமாறன் ஆகியோருடன் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது குளித்துக் கொண்டிருந்த ராஜேஷ், தினேஷ், திருமாறன் ஆகிய மூன்று பேரும் ஆற்று சூழலில் சிக்கினர். இதனை பார்த்ததும் கரையில் நின்று கொண்டிருந்த திருக்குமரன் திருமாறனை பத்திரமாக மீட்டார். ஆனால் தினேஷ் மற்றும் ராஜேஷை மீட்க முடியவில்லை. இருவரும் ஆற்று தண்ணீரில் மூழ்கினர்.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷின் சடலத்தை மீட்டனர். பின்னர் ராஜேஷை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நேற்று காலை அலிவலம் பிரிவு வாய்க்காலில் கிடந்த ராஜேஷின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு ராஜேஷ் மற்றும் தினேஷின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.