தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஜெபமாலைபுரம் பகுதியில் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு அமைந்துள்ளது. தற்போது இங்கு குப்பைகள் கொட்டப்படுவதில்லை. ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பைகளை தரம் பிடித்து உரமாக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த குடிசை வீடுகளில் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குடிசை வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் 6 குடிசைகள் எரிந்து சாம்பலானது. இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரரான ஆரோக்கியசாமி(72) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆரோக்கியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.