கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலைப் பார்க்கும் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த குழந்தைகள் 2 பேரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குமார் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இது குறித்து விஜயா வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் குமார் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதன் காரணமாக காவல்துறையினர் குமாரின் மனைவி விஜயாவிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது குமார் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்து விஜயாவிடம் தகராறு செய்ததால் கோபத்தில் விஜயா குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின் தான் காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குமார் குடிபோதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்று கூறியது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் விஜயாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக விஜயா மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.