தமிழகத்தில் நாளுக்கு நாள் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்னையில் மட்டுமே அமலில் இருக்கிறது. இங்கு ப்ளூ லைன் மற்றும் கிரீன் லைன் வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நிலையில், இதை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பிறகு புதிதாக பர்பிள் லைன், ரெட் லைன், ஆரஞ்சு லைன் போன்ற வழித்தடங்களை அமைப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ப்ளு லைன் வழித்தடத்தில் கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவு படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கோப்பு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அப்போதையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதில் கையெழுத்திடாமல் கிடப்பிலேயே போட்டுவிட்டார். இதனையடுத்து தற்போது கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட இருப்பதால் மெட்ரோ ரயில் வசதி இருந்தால் சென்னை வாசிகளுக்கு பயணம் சுலபமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் பேருந்துகள் செல்லும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பேருந்து நிலையத்தை அடைவதற்காக மாநகராட்சியின் பல பகுதிகளில் இருந்தும் புதிய பேருந்துகள் இயக்கப்படும். இதன் காரணமாகத்தான் மெட்ரோ ரயில் வசதி இருந்தால் பயணம் ஆனது சுலபமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே முதல்வர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குவாரா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.