நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கிலும், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும் தமிழக அரசு சார்பில் மீண்டும் மஞ்சள் பைகளை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி கிராமப்பகுதிகளில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாராயணதேவன்பட்டி ஊராட்சியில் இந்த திட்டமானது சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் படி பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இதில் பிளாஸ்டிக் பை, எண்ணெய் கவர், பால் கவர், பிஸ்கட் கவர், மசாலா பாக்கெட் கவர் ஆகிய பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து கொடுத்தால் ஊராட்சி சார்பில் ஒரு கிலோ 8 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சிப்பகுதி முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.