படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் ஆலங்காடு புதூர் பகுதியில் கூலி தொழிலாளியான வேல்சாமி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான வேல்சாமி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபதி கோபத்தில் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டிற்கு வந்த வேல்சாமி தனது 2-வது மகளிடம் தகராறு செய்துள்ளார். மேலும் மகளை அடிப்பதற்காக வேல்சாமி கட்டையுடன் சென்றுள்ளார்.
இதனை பார்த்த மகள் அங்கிருந்து தப்பி ஓடி பக்கத்து வீட்டில் ஒளிந்து கொண்டார். இதனை அடுத்து அசைவற்ற நிலையில் காயங்களுடன் கிடந்த வேல்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வேல்சாமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வேல்சாமி இறந்தது தெரியவந்தது.