அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு பேருந்து ஒன்று தேங்காப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உதச்சிக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று ஆட்களை இறக்கிக் கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜின் என்பவர் திடீரென பேருந்து முன்பு வந்து நின்று தகராறு செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பேருந்து மீது வீசியதால் முன் பக்க கண்ணாடி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜினை கைது செய்து நடத்திய விசாரணையில் குடிபோதையில் அவர் தகராறு செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.