கிராமத்திற்குள் இரவு நேரத்தில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருப்புக்கல் கிராமத்திற்குள் கரடி ஒன்று புகுந்தது. இந்நிலையில் சாலையில் உலா வந்த கரடி அவ்வழியாக சென்ற வாகனத்திற்கு வழி விடாமல் நின்றது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கரடி புகுந்துவிட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இரவு நேரத்தில் கரடி உலா வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரடி ஒன்று தாக்கியதால் ஒரு பெண் உயிரிழந்தார். மீண்டும் இதே பகுதியில் கரடி உலா வருவதால் அச்சத்தில் இருக்கிறோம். எனவே கரடியை நடமாட்டத்தை கண்காணித்து வனத்துறையினர் அதனை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.