தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வு முறையில் தற்போது புதிய மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி எழுத்து தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தற்போது தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு பதவிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கிய நிலையில் தேர்வு முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தேர்வுக்கு 24 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக காவலர் தேர்வுகளில் எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண், உடன் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண், சிறப்பு மதிப்பெண் 5ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது எழுத்து தேர்வில் 10 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டு,உடல் திறன் தேர்வில் கூடுதலாக 9 மதிப்பெண் மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஒன்றை உயர்த்தியுள்ளது.
மேலும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் கூறு அளத்தல்,உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்படும் உடல் திறன் தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய விதிமுறைகளின் படி கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டம் ஆகியவை நடைபெறும். அதில் கயிறு ஏறுதலில் தேர்ச்சி பெறாதவர்கள் வெளியேற்றப்படுவர். தேர்ச்சி பெற்றவர்கள் நீளம், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்ட தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறைகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி கயிறு ஏறுதலில் ஒருவர் தேர்ச்சி பெறாவிட்டாலும், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகிய தேர்வுகளில் பங்கேற்க முடியும்.
மூன்று தேர்வுகளிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு மூன்று தேர்வுகளிலும் அனைவரையும் பங்கேற்க செய்து உடல் திறன் தேர்வின் மூலம் மொத்த மதிப்பெண் மற்றும் எழுத்து தேர்வு மதிப்பெண்களோடு சேர்க்கப்பட்டு 1:2 என்ற விகிதத்தில் உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.