திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (31). இவர் வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இணையதளம் வாயிலாக இவரை தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் கார்த்திகேயனுக்கு அமெரிக்க நாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறினார். அத்துடன் விசா செலவுக்காக ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பிய கார்த்திகேயன் அவர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தினார். இதையடுத்து அந்த மர்மநபர் கூறியவாறு விசா பெற்றுத்தரவில்லை என்று தெரிகிறது.
அதன்பின் அவரை இணையதளம் வாயிலாக கார்த்திகேயன் தொடர்புகொள்ள முயன்றபோது, தான் மோசடியில் சிக்கியதை உணர்ந்தார். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கார்த்திகேயன் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் காவல்துறையினருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் அப்பணம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளை தொடர்புகொண்ட காவல்துறையினர், அந்த வங்கி கணக்கின் பண பரிவர்த்தனையை முடக்கினர். அதுமட்டுமின்றி கார்த்திகேயன் செலுத்திய தொகையையும் மீட்டனர். இந்நிலையில் மீட்கப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரத்தை கார்த்திகேயனிடம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கினார்.