திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார்.
இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் பாராமல் ஜீவிதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதைத்தொடர்ந்து தானும் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பின்னர், ரத்தம் சொட்ட சொட்ட மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். இதனைக் கண்ட கமல்காந்தின் தாய் அலறி சத்தம் போட்டு, அக்கம்பக்கத்தினரை அழைத்து மாடிக்குச் சென்று பார்த்தபோது ஜீவிதா ரத்தவெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், கமல்காந்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த முசிறி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜீவிதாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.