உலக அளவில் பசி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி, பணவீக்கம், உணவு பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது. இருப்பினும் இலங்கையால் நிதி நெருக்கடி பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டும் வர முடியவில்லை.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்று, கொரோனா பரவலின் தாக்கத்தினால் மற்ற நாடுகளுக்கும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. எனவே இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடியை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு மற்ற நாடுகளும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருக்க வேண்டும் என ஐ.நா வளச்சி திட்டத்தின் அதிகாரி அச்சிம் ஸ்டெய்னர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக அளவில் பசி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், கடந்த 2021-ம் ஆண்டு 828 மில்லியன் பேர் பட்டினியால் தவிப்பது தெரிய வந்துள்ளது. மேலும் கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு பசி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.