அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார்.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ள நிலையில், தடைகேட்டு தொடர்பட்ட மனுவை மீண்டும் அனுமதிக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டிருந்த நீதிபதி, ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தற்போது உள்ளதா ? பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட வேண்டும். பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா ?
பொதுக்குழு நோட்டீஸில் கையெழுத்திடும் அதிகாரம் யாருக்கு உள்ளது ? என நான்கு கேள்விகளை எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு முன் வைத்தனர். இதற்கு விரிவான விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இன்றைய விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்னவாக இருக்கும் ? என்று எதிர்பார்ப்பு எழுந்து இருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 2665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2190 பேர் ஜூலை 11க்கு நடக்கக்கூடிய செயற்குழு , பொதுக்குழுக்கு சம்பந்தம் தெரிவித்திருக்கிறார்கள். 82 சதவீதம் பேர் செயற்குழு – பொது பொதுக்குழுவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்கள். அதிமுக பைலா படி 20 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்தாலே, பொதுக்குழு – செயற்குழு நடத்த முடியும் என தங்கள் தரப்பு வாதங்களை வைத்துள்ளனர்.