வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் மொத்தம் 260 கடைகள் உள்ளது. ஆனால் தற்போது 140 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் கடைகளுக்கு முன்பு உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்து பொருட்கள் வைப்பதாகவும், இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் வியாபாரிகள் பொருட்களை வைக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அவர்கள் அதை கடைபிடிக்கவில்லை. இதனால் நேற்று மாநகராட்சி வருவாய் அதிகாரி சுப்பையா, சேகர், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை டெம்போவில் ஏற்றினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் நாங்கள் இப்படி பொருட்களை நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்தால் தான் அதிக வியாபாரம் நடைபெறுகிறது. இதனால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. எனவே பொருட்களை நடிப்பாதையில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கூறினர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் வியாபாரிகள் பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது