Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு…. திடீரென தீக்குளிக்க முயன்ற 3 பெண்கள்…. திருப்பூரில் பரபரப்பு…!!!

திடீரென பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை, பல்லடம் மற்றும் ராயபுரம் பகுதிகளில் பல வருடங்களாக 40-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகள் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் விடுத்துள்ளனர். இதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஜூலை 8-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு சென்று அங்கிருந்த மக்களிடம் உங்களுடைய பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் வீடுகளை காலி செய்ய மறுத்த பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ராஜேஸ்வரி, காளியம்மாள் உட்பட 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி செய்தனர். இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். மேலும் பொது மக்களின் வலியுறுத்தலின் பேரில் அதிகாரிகள் மாற்று இடத்தை அப்பகுதி மக்களுக்கு காண்பிப்பதற்காக வேனில் அழைத்து சென்றனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறவில்லை.

Categories

Tech |