திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் அஜித்குமார் (24). இவர் சென்னை ஆவடி அடுத்த மோரை ராகவேந்திரா நகரில் உள்ள ஒரு கடையை ரூபாய் 6 லட்சம் கொடுத்து லீசுக்கு எடுத்து சென்ற 8 மாதமாக பேக்கரி கடை நடத்தி வந்தார். இதனிடையில் சென்றசில மாதங்களாகவே கடையில் சரியாக வியாபாரம் நடைபெறவில்லை.
இதன் காரணமாக அஜித்குமார் கடையை மூடிவிட நினைத்தார். அதன்படி அஜித்குமார் நேற்று காலை கடை உரிமையாளர் சுந்தரிடம் தான் லீசுக்கு கொடுத்த ரூபாய் 6 லட்சத்தை தரும்மாறு கேட்டார். அதற்கு சுந்தர் “நீ கொடுத்த பணத்தில் தான் அந்த கட்டிடத்தை கட்டி இருக்கிறேன். தற்போது என்னிடம் பணமில்லை. இதனால் தொடர்ந்து கடையை நடத்து, நான் பின்னர் தருகிறேன்” என்று கூறியதாக தெரிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அஜித்குமார் “எனக்கு உடனடியாக பணம் தரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூறி திடீரென்று கடையின் மொட்டை மாடிக்கு சென்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வரச் செய்தனர். அத்துடன் இதுபற்றி காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.