இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வரயா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும். மேலும் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், மடோனா செபாஸ்டின், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிப்ரவரி 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள ஆனந்த் தனது அனுபவங்களை கூறுகையில், கிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது எனது கனவாக இருந்தது. பாடலாசிரியராக வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆசிரியர்கள் சிலர் உள்ளார்கள். அவர்களில் மருதகாசியின் ரசிகன் நான். கண்ணதாசன், வைரமுத்து, உடுமலை நாராயணகவி, ‘பாபநாசம்’ சிவா ஆகியோரையும் பிடிக்கும்.
இப்படத்தில் வரும் பாடலான ‘ஈஸி கம் ஈஸி கோ’ என்ற பாடலின் இரண்டாவது வரி ‘கைப்பிடித்து நாம் நடக்க ஒரு உலகம் ஒதுங்கிவிடும் வா வா வா..வீசி வரும் பேரலையும் பதுங்கி நின்று தழுவிடும் வா வா வா….ஆகிய வரிகளை எழுதி முடித்ததும் தனாவிற்கும், மணிரத்னத்திற்கும் அனுப்பினேன், உடனே ஏன் இன்னும் இந்த பாடலை முழுதாக முடிக்கவில்லை என்று மணிரத்னம் சார் கேட்டார். குறைவான நாட்களில் இப்பாடலை இயற்றி இருந்தாலும் பாடல் நன்றாக வந்திருக்கிறது என்று எனக்கு ஊக்கம் கொடுத்தனர்.
பாடல் அமைவதற்கான சூழ்நிலை, யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொண்டு அதை பிரதிபலிக்கும் விதத்தில் பாடல் வரிகளை இயற்ற வேண்டும். பாடலாசிரியருக்கு போதிய இடைவெளியும், சுதந்திரமும் இருந்தால் மட்டுமே பாடல் வரிகள் சிறப்பாக அமையும். இந்தப் படத்தில் எனக்கு அது இருந்தது.
எதிர்காலத்தில் பாடலாசிரியராகவே இருப்பேனா என்பது தெரியாது. தனா என்னுடைய நல்ல நண்பர். நிறைய விஷயங்கள் இருவரும் சேர்ந்து பேசுவோம். என்னைவிட இலக்கியத்தில் புலமை வாய்ந்தவர் தனா என்றார்.