காலப் போக்கில் மணலிலுள்ள சிறு அளவிலான இரும்புச் சத்து, நிறைந்த தாதுக்கள் உடைந்து இரும்பு ஹேமடைட் படிகங்களாக ஆக்சிஜனேற்றப்பட்டு குவார்ட்ஸ் மணல் துகள்களில் மிக மெல்லிய வண்ணப்பூச்சு போன்ற பூச்சுகளாக உருவாகிறது. ஹேமடைட் படிகங்கள் சிவப்பு நிறத்தைத் தவிர்த்து அனைத்து மென்மையான வண்ணங்களையும் உறிஞ்சி, பிரதிபலிக்கிறது. அவ்வாறு பிரதிபலிக்கும் போது அவை மணற் கற்களுக்கு அவற்றின் சிவப்பு நிறத்தையளிக்கிறது. ஜெய்ப்பூரில் உள்ள ஹவா மஹால் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணக்கற்களால் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். பழங்காலத்துக் கோயில்களும் இச்சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பழங்காலம் தொட்டே சிவப்புக்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள், சிறு அரண்மனைகள் மற்றும் பெரிய வீடுகள் ஆகியவை நமது நாட்டில் இருந்திருக்கிறது.
தற்போது மறுபடியும் சிவப்பு கற்களைக் கொண்டு வீடுகளைக் கட்டுவது பிரபலமாகி வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் இந்த கற்களை கொண்டு கட்டப்படும் வீடுகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாதாரண கற்களைக் கொண்டு கட்டும் வீடுகளைவிட இவை அதிகமான வருடங்கள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கிறது. அத்துடன் சாதாரண கற்களால் கட்டப்படும் வீடுகளுக்கு ஆகும் செலவை விட இந்த சிவப்பு கற்களைக் கொண்டு கட்டப்படும் வீடுகளுக்கு மிகக் குறைந்த செலவே ஆகிறது. சிக்கனமாக வீடு கட்ட விரும்புவோருக்கு மிகச்சிறந்த தேர்வாக இந்த கற்கள் இருக்கும். செங்கல்களைக் கொண்டு அரைஅடி உயரத்திற்கு சுவர்களை எழுப்பி தற்போது சிவப்புக்கல் ஸ்லாப்களுக்கு மேலே மண்ணை பரப்புகிறார்கள். அவற்றிற்கு மேல் நீர்புகாத பிளாஸ்டிக் ஷீட்டுகளை விரித்து அதற்கும் மேலே மண்ணை பரப்பி தண்ணீர் தெளித்து காய்ந்த பின், அதன்மேல் செங்கற்களை அடுக்கி அதற்கும் மேலே சிமெண்ட் கலவையை போட்டு நன்றாக பரப்பி விடுகிறார்கள்.
ஆகவே இவ்வாறு தளம் அமைக்கப்பட்ட வீடுகள் அதிக ஆயுள் கொண்டவையாக இருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் வீடுகட்ட நினைப்பவர்களுக்கு மிகச்சரியான தேர்வாக இவ்வகை சிவப்புக்கல் இருக்கிறது. இந்த வீடுகளை கட்டுவதற்கு அதிகளவில் பொருட்செலவு ஆவதில்லை. அதேபோன்று மிகக்குறுகிய காலத்தில் இந்த வீடுகளைக் கட்டி முடித்துவிட முடியும். மேலும் குறைவான நபர்களைக் கொண்டு இந்த வீட்டை கட்டி முடித்துவிட முடியும் என்பது மற்றொரு சிறப்பாகும். கோடைக் காலத்தில் இந்த சிவப்புக்கல் வீட்டிற்குள் வெப்பத்தை கிரகிக்காமல் வீட்டை குளுமையாக வைத்திருக்கிறது. வட இந்தியாவில் பிரபலமான இவ்வகை வீடுகள் தற்போது தமிழகத்திலும் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. பழங்காலத்தில் மக்களிடையே புழக்கத்திலிருந்த இவ்வகை வீடுகள் நாகரிக வளர்ச்சியின் காரணமாக மறைந்துபோய் தற்போது மீண்டும் மக்களிடையே பிரபலமடைந்து கொண்டிருக்கிறது.