இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இரு நாட்களுக்கு பெட்ரோல் டீசல் விற்பனை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் எரிபொருள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் இலங்கையில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடைய கிளை, சில்லறை விற்பனை நிலையங்களில் டீசல் மற்றும் பெட்ரோலை விற்பனை செய்து வந்தது.
இந்நிலையில், நாட்டின் நிதி நெருக்கடிக்கு இலங்கை அரசாங்கத்தால் தீர்வு காண முடியவில்லை. எனவே, அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றன. மேலும் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்திருக்கிறது.
எனவே, நாடு முழுக்க மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று நாடு முழுக்க எரிபொருள் விற்பனையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நிறுத்தியுள்ளது.