திருவாரூரில் நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 963 சவரன் நகை, 23 கிலோ வெள்ளி, 41 லட்சம் பணம் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது போடப்பட்டுள்ள முதல் தகவலறிக்கையின் விவரம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்ததற்கான முகாந்திரம் பற்றி பேட்டி கொடுக்கப்பட்டது. அதாவது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நன்னிலம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான காமராஜூவுக்கு மனைவி, 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மகன்கள் இருவரும் டாக்டர்கள் தான். காமராஜ் அமைச்சராகயிருந்த காலக்கட்டத்தில் இவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சியடைந்து இருக்கிறது.
இதுகுறித்து வந்த புகாரில் ஆவணங்களை திரட்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, காமராஜுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டது. சென்ற 2015 ஏப்ரலில் முன்னாள் அமைச்சர் காமராஜின் சொத்துமதிப்பு 1 கோடியே 39 லட்சமாக இருந்து உள்ளது. இதையடுத்து 2021 மார்ச் மாதத்தில் சொத்துமதிப்பு 60 கோடியே 24 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாக முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களில் 43 மடங்கு காமராஜின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அரசியல் தவிர்த்து காமராஜ் வேறென்ன தொழில் செய்கிறார்..? ஏதேனும் முதலீடு செய்து வருமானம் வருகிறதா என லஞ்ச ஒழிப்புத் துறை ஆராய்ந்ததில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் என்னவென்றால் தஞ்சாவூரில் அண்ணாமலை செட்டியார் என்பவரால் நிறுவப்பட்ட என்ஏஆர்சி என்ற ஹோட்டலை சென்ற 2017ல் ரெஜிஸ்டர் செய்யும்போது காமராஜ் தரப்பில் ரூபாய் 25 லட்சம் முதலீடு செய்ததாக காட்டி உள்ளனர். எனினும் அந்த முகவரியில் அப்படி ஒரு ஹோட்டலே இல்லை என தெரியவந்துள்ளது. எப்ஐஆரில் a1 ஆக இருக்கும் காமராஜ், a4 சந்திரகாந்த் மற்றும் a5 கிரிஷ்ண முர்த்தி 3 பேரும் கல்லூரி கால நண்பர்கள். இவர்கள் 3 பேரும் சேர்ந்து என்ஏஆர்சி என்ற ஹோட்டல் பெயரில் 27 கோடி ரூபாய் நிலத்தை வாங்கி அந்த 1 லட்சத்து 86 ஆயிரம் ஸ்கொயர் பிட் உள்ள நிலத்தை காமராஜுவின் மகன் பெயரில் 99 வருடத்திற்கு லீஸ் அக்ரீமெண்ட்டும் போட்டுள்ளனர்.
மேலும் இந்த இடத்தை காமராஜின் மகன் 99 வருடத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் வருஷத்துக்கு 57 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் எனவும் இவர்களே ஒப்பந்தம் செய்துள்ளனர். அத்துடன் இதில் 5 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரியும் கட்டி இருக்கின்றனர். ஆகவே இல்லாத ஒரு ஹோட்டலுக்கு ஆவணம் தயாரித்து அதன் மதிப்பை 25 லட்சமாக பதிவு செய்து உள்ளனர். இப்போது காமராஜ் வாங்கியுள்ள அந்த இடத்தில் அவரது மகனுக்கு மருத்துவமனை கட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தது. இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சித்ரா தொடர் விசாரணை நடத்தி வருகிறார். முதல் தகவலறிக்கையில் காமராஜ் மற்றும் நண்பர்கள் 2 பேருடன் காமராஜின் மகன்கள் இனியன், இன்பன் பெயர்கள் a2 , a3 ஆக பதியப்பட்டுள்ளது.