திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குருவம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் பாபு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொன்மையான கலை சின்னங்களையும், அதற்கான சான்றுகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து பாபு கூறுகையில், “இந்த ஊரின் கிழக்கே பழமை வாய்ந்த சோழர் கால சிவலிங்கம், நீர்பாசன அடைவுத் தூண், பழமையான கிணறு, பழமையான அய்யனார் சிலை போன்றவை இருக்கிறது. இவ்வூரில் உள்ள சிவன் கோயிலின் சுற்றுப்புறத்தில் முட்புதர்கள் நிறைந்த பகுதியின் மேற்பரப்பில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அங்கு முற்காலத்தில் பழமையான தமிழர் நாகரிகம் இருந்துள்ளதை உறுதி செய்வதற்கான சான்று கிடைத்துள்ளது.
முற்கால மக்கள் பயன்படுத்திய கறுப்பு, சிவப்பு மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் மற்றும் பழங்காலத்தில் பெண்கள் அணிந்த யானை தந்தத்தால் செய்யப்பட்ட வளையல், சங்கு வளையல்கள், பவளமணி, வெண்ணிற பவளம் போன்றவையும் கிடைத்துள்ளன. மக்கள் ஆடை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட நூல் கோர்க்கும் மணிகள் கிடைத்துள்ளன. இதனால் இங்கு வாழ்ந்த மக்கள் நெசவுத்தொழில் செய்து வந்துள்ளனர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் இங்கு இரும்பு உருக்காலை இருந்ததற்கான ஆதாரமாக இரும்புக் கழிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
மண் பானைகள், கிண்டி என்ற நீர் குடுவையின் உடைந்த பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மக்கள் மண்பாண்டத் தொழிலை கலைநயத்தோடு செய்யும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. இங்கு உள்ள சில இடங்களில் தமிழ் பிராமி எழுத்துக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. கறுப்பு, சிவப்பு பானை ஓட்டில் ஓவியக் குறியீடு, தராசு உருவமும் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. சில பானை ஓடுகள் வழவழப்பாகவும் எளிதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
குருவம்பட்டி சோழ நாட்டின் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. நதிக்கரையில் நாகரிகங்கள் பெருமளவு வளர்ந்து உள்ளதை இது உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்றுள்ள மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட சான்றுகள் ரோமானிய மண்பாண்ட ஓடுகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் உள்ளது. அதனால் ரோமானியர்களோடு வணிக தொடர்பு இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஒரு காலத்தில் இப்பகுதியில் நகர நாகரிகமாக மக்கள் வாழ்ந்திருக்கலாம். மேலும் மிகப்பெரிய அளவில் தொழில் கூடங்களும், கட்டமைக்கப்பட்ட வீடுகளும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் பெரிய அளவிலான செங்கல் கட்டுமான அமைப்பு கொண்ட சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.