காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அங்கராயம்பாளையம் பகுதியில் லோகநாதன்-கவுரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பர்வேஷ், தருண் ஆதித்யா என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி இரவு லோகநாதன், கவுரி , பர்வேஷ், தருண் ஆதித்யா ஆகிய 4 பேரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 1 மணி அளவில் திடீரென யாரோ ஒருவர் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்ட லோகநாதன்,கவுரி ஆகிய 2 பேரும் தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்துள்ளனர். அப்போது படுக்கையில் இருந்த தருண் ஆதித்யாவை காணவில்லை.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தருண் ஆதித்யாவை வீடு முழுவதும் தேடியுள்ளனர். மேலும் வீட்டின் அருகே இருக்கும் பெரிய குன்று பகுதியில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அவர்கள் தங்களது மகனை அந்த மர்ம நபர் கடத்தி சென்றிருக்கலாம் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 3 தனிப்படைகள் மூலம் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.