மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரோடு ரோலர் எந்திர ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பெருவிளை பகுதியில் ஹரி(44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரோடு ரோலர் எந்திரத்தின் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமிதா(40) என்ற மனைவியும், சுஜன்(15) என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஹரி மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் சுங்கான்கடை குதிரைபாய்ந்தான் குளம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே பிரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஹரியின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.