திருட சென்ற இடத்தில் போதையில் தூங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பராசக்தி நகர் பகுதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்ற ரத்தினவேல் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.4 ஆயிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மற்றொரு அறையில் சென்று பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து ரத்தினவேல் அந்த கதவை வெளிபக்கமாக பூட்டி வெளியே வந்து அவனியாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று கதவை திறந்து வாலிபரை எழுப்பினர். அப்போது அந்த போதையில் இருந்த வாலிபர் காவல்துறையினரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அப்போது அவரை சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் பழங்காநத்தம் பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதற்கிடையே நடராஜன் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த போது வீடு பூட்டியிருந்ததால் உள்ளே புகுந்து திருடியபோது போதை அதிகமாக இருந்ததால் வீட்டிலேயே தன்னை அறியாமல் தூங்கியதையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.