சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் எனும் போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து மேயர் தன் வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்த தன் புகைப்படங்களை இப்போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
ஜீலை 9 முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை ஒருமாதம் இது நடைபெறும். இந்த குப்பை தரம்பிரித்து தரும் போட்டியில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பங்கேற்று, தங்களது வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என 2 கூடைகளில் பிரித்துக்கொடுக்க வேண்டும். அதனை படம் எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு 8925800864 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும்.
அதே எண்ணில் வாட்ஸ்அப்பில் இல்லத்தரசிகள் பதிவிட்டால், அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் 3 பேருக்கு டி. வி. வாஷிங் மெஷின், பிரிட்ஜ் ஆகிய பரிசு பொருட்கள் வழங்கப்படும். ஆகவே பொதுமக்கள் “என் குப்பை எனது பொறுப்பு” என்ற இத்திட்டத்திற்கு முழு ஒத்துழப்பு தரும்படி மேயர் பிரியா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் வடக்கு மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம்,உதவி கமிஷனர் கோவிந்தராஜ் கவுன்சிலர்கள் தீர்த்தி, காசிநாதன்,நந்தினி அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.