தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மசூதிகளை சீரமைப்பதற்காக கூடுதல் நிதி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டையில் சாதுல்லா கான் மசூதி அமைந்துள்ளது. இங்கு செஞ்சியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் ஊர்வலமாக நடந்து சென்றனர். அதன்பின் சாதுல்லா கான் மசூதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். இதில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார். இவர் மசூதியில் இருந்த அனைத்து முஸ்லீம்களுக்கும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பிறகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.
அவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு விதமான நலத்திட்டங்களை உருவாக்கி மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பழமை வாய்ந்த மசூதிகளை சீரமைப்பதற்காக 6 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அதேப்போன்று நடப்பாண்டிலும் மசூதிகளை சீரமைப்பதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கூடுதலாக நிதி ஒதுக்குவதற்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கபகஸ்தானங்களை பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
இதனையடுத்து மகளிர் கிறிஸ்தவ உதவி சங்கம் மற்றும் முஸ்லிம் உதவும் சங்கம் என 2 சங்கங்கள் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக முதலமைச்சரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி வழங்கிய பிறகு சங்கங்களை அதிகரிக்கும் பணி செயல்படுத்தப்படும். இந்த சங்கங்கள் மூலமாக விதவை குழந்தைகளின் படிப்பு செலவு, தையல் மெஷின் வழங்குதல், சிறு தொழில் தொடங்குவதற்கு மானியம் போன்றவற்றிற்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கினால், அரசு சார்பில் 2 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்றார்.