Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்” ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவு….!!

மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சிகரலஅள்ளி மலைக்கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள இருளர் இன மக்களிடம் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்காகவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், அனைவருக்கும் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இருளர் இன மக்களின் மேம்பாட்டிற்காக இருப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வியில் முன்னேற்றமடைந்தால் அவர்கள் வாழ்க்கை தரத்திலும், பொருளாதாரத்திலும் மேன்மை அடைய முடியும் என்பதால்தான் இருளர் இன மக்களுக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. இப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு முகாம் மூலம் உங்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வையுங்கள். இங்குள்ள உயர்க்கல்வி முடித்த குழந்தைகள் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

அதற்கான முயற்சியில் தொடர்ந்து நீங்கள் ஈடுபட்டு வந்தால் நிச்சயம் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் எனவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறினார். இதனையடுத்து அஜ்ஜன அள்ளி, வீரப்பன் கொட்டாய் பகுதி் இருளர் இன மக்களுக்கு இ பட்டா வழங்க பென்னாகரம் தாசில்தாருக்கு உத்தரவிட்டார். மேலும் அஜ்ஜனஅள்ளி, வீரப்பன் கொட்டாய் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தாசில்தார் அசோக்குமார், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், மீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |