இலங்கையில் அதிபரும் பிரதமரும் ராஜினாமா செய்த நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சர்களும் பதவி விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, பல மாதங்களாக மக்கள் தீவிரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் பதவி விலக வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தது.
எனவே மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று திரண்டு நேற்று அதிபரின் மாளிகைக்குள் அதிரடியாக புகுந்தனர். மேலும், அதிபரின் வீட்டிற்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள். எனினும் அதற்கு முன்பாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகினார். மேலும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவும் வரும் 13ஆம் தேதி அன்று பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்கிய அமைச்சர்களும் பதவி விலகிவிட்டனர். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் போன்றோர் பதவி விலகியிருக்கிறார்கள். நாட்டின் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கூட்டாட்சி அரசை உருவாக்க வழிவகுக்கும் விதமாக பதவி விலகியதாக கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.