திடீரென ஊராட்சி மன்ற தலைவர் தனது மனைவியுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடலூர் மாவட்டத்தில் உள்ள சான்றோர்பாளையம் பகுதி 9-வது வார்டாக உள்ளது. இந்த வார்டின் உறுப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் அடுத்த உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 4 பேர் போட்டியிட்டனர். அப்போது சிலர் ஊராட்சி மன்ற தலைவர் பிரசன்னா ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசியதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரசன்னா அவரது மனைவி கோமதி ஆகிய 2 பேரும் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரசன்னா மற்றும் அவரது மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.