சுற்றுலா சென்ற இடத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் கேரள மாநிலம் மதுவாடா கிராமத்தை சேர்ந்த நிஷாத் அகமத், ஆந்திர மாநிலம் திருப்பதி ராமச்சந்திர நகரை சேர்ந்த சண்முகி, அந்தமான் போர்ட் பிளேரை சேர்ந்த அலினா, சாஜான், ஆந்திர மாநிலம் மகுண்டாலே அவுட்டை சேர்ந்த ரித்தின், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுப்ரீத் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள் 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சனிக்கிழமை இரவு சுற்றுலா புறப்பட்டனர். இந்த காரை நிஷாத் அகமத் ஓட்டினார்.
இந்நிலையில் மின்னூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி சண்முகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மற்ற 5 பேரும் காயங்களுடன் உயிர்த்தப்பினர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் ஆம்பூர் காவல்துறையினர் அவர்களை உடனடியாக மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.