மின்வேலியில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேம்பு கிராமத்தில் விவசாயியான ராமு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மணிலா பயிரை காட்டு பன்றிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஏழுமலை(50) என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார் அப்போது ராமுவின் நிலத்தின் வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக ஏழுமலை மின்வேலியை மிதித்துள்ளார்.
இதனால் மின்சாரம் தாக்கி ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏழுமலையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.