உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கி தற்போது வரை இடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இதில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளபோதிலும், ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவமானது ஈடுகொடுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு உதவுவதற்காக அந்த நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் இறங்கினர். அவர்களில் ஏராளமானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள சூழ்நிலையில், அவ்வாறு புதியதாக உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு இங்கிலாந்தில் பயிற்சியளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சுமார் 10 ஆயிரம் உக்ரைன் வீரர்களுக்கு இங்கிலாந்து ராணுவத்தின் உதவியுடன் பயிற்சி வழங்க முடிவுசெய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதற்கட்டமாக உக்ரைனிலிருந்து வீரர்களின் குழு ஒன்று இங்கிலாந்திற்கு சென்றுள்ளது. அங்கு அவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வது, அவசரகால போர் நுணுக்கங்கள், போர்க்களத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்தல் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. உக்ரைனுக்கு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக முன்பே இங்கிலாந்து அரசு அறிவித்திருந்த சூழ்நிலையில், அதன் ஒருபகுதியாக இந்த ராணுவ பயிற்சிகள் வழங்கப்பட இருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.