Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில்களில் இது குறைய போகுதாம்?…. ரயில்வே வாரியம் போட்ட பிளான்….!!!!

ரயில்வே துறையில் பல சீர்திருத்தங்களை கொண்டுவர ரயில்வே வாரியம் முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் மூத்தகுடிமக்களுக்கு வழங்கப்பட்ட பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் பிளாட்பாரம் கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. இந்த உயர்வினை கைவிட ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்த சூழ்நிலையில், தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது. நீண்டதூர எக்ஸ்பிரஸ் ரயில்களில் குறைந்தது 12 -13 தூங்கும்வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இவற்றில் 864-936 படுக்கைகள் இருக்கும். இதன் கட்டணம் குறைவாக உள்ளதால் ஏராளமான பயணிகள், மூத்தகுடிமக்கள் பலரும் இப்பெட்டிகளில் தான் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

ரயில் பெட்டிகளின் தரம் உயர்த்தப்பட்ட பின் தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே வாரியம் குறைத்தது. அந்த அடிப்படையில் சென்னையிலிருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சிக்கு இயக்கப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், தூத்துக்குடிக்கு இயக்கப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை 13ல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டது. இவ்வாறு தூங்கும்வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் ரயில்களில் சீட் கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதற்குரிய கண்டனத்தை ரயில் பயணிகள் பதிவுசெய்து வந்த சூழ்நிலையில், தற்போது அடுத்த அதிரடியை ரயில்வே வாரியம் கையில் எடுத்துள்ளது. என்னவென்றால் குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளை 2 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு பதில் அதே ரயில்களில் ஏ.சி. பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது. இப்போது ரயில்களில் ஏ.சி. முதல் அடுக்கு, 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு பெட்டிகள் இருக்கிறது. இவற்றின் எண்ணிக்கையானது குறைவாகவே இருக்கும். காரணம் இவற்றின் டிக்கெட் விலை தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளுக்கான டிக்கெட்டின் விலையை விட 2 -3 மடங்கு அதிகமாக இருக்கும்.

உதாரணமாக நாகப்பட்டினத்திலிருந்து, சென்னைக்கு தூங்கும்வசதி உடைய பெட்டியில் டிக்கெட் கட்டணம் ரூபாய் 225 ஆகும். இதுவே ஏ.சி. 3 அடுக்கு பெட்டியில் பயணிக்க ரூபாய் 650 ஆகும். ஆகவே இது 3 மடங்கு அதிகம் ஆகும். இம்முடிவு விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது , சில ரயில்களில் ஏ.சி. 3 அடுக்கு பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதனால் அதன் பிறகே இந்த முடிவு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். ரயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக ரயில்வேயின் வருமானத்தை உயர்த்த வாரியம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |