இலங்கையில் ஆட்சி மாற்றம் அமைதியான வழியில் நடக்க வேண்டும் என்று அந்நாட்டிற்கான அமெரிக்க தூதர் கூறியிருக்கிறார்.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல மாதங்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் அதிபரின் மாளிகைக்குள் புகுந்தனர். போராட்டம் உச்சகட்டத்தை அடைந்ததால் பிரதமர் மற்றும் அதிபர் இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இந்நிலையில் இலங்கைக்கான அமெரிக்க தூதராக இருக்கும் ஜூலி சுங், இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை அமெரிக்கா உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. அந்நாட்டிற்கு பலவீனமாக அமைந்திருக்கும் இந்த சமயத்தில் அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நாங்கள் இலங்கைக்கு துணையாக இருப்போம்.
அந்த நாட்டில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியும் ஆட்சி மாற்றம் நிகழ அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்புடன் இயங்க வேண்டும். அந்நாட்டின் அரசியல் அமைப்புப்படி தேர்வு செய்யப்படும் புதிய ஆட்சி விரைவாக இந்த நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி இருக்கிறார்.