மத்திய பிரதேசம் அம்பா பத்ரா கிராமத்தை சேர்ந்தவர் புஜாராம். இவரது இளைய மகன் ராஜா(2)வின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக புஜாராம், குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவருடன் அவரின் மூத்த மகன் குல்ஷனும்(8) சென்றுள்ளார். மருத்துவமனையில் ராஜா சிகிச்சை பலனின்றி இறந்தவுடன் புஜாராம், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துதருமாறு மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை மருத்துவமனை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதன்பின்னர்வேறு வாகனம் கிடைக்கிறதா என்று பார்க்க புஜாராம் தனது 2 வயது மகனின் சடலத்தை 8 வயது மகனிடம் கொடுத்துச்சென்றுள்ளார். குல்ஷன் தன் இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருந்த நிலையில், அவருக்கு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இறந்த சகோதரனின் உடலை மடியில் வைத்துக்கொண்டிருந்த சிறுவனின் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.