திருப்பூரில் நெருங்கி பழக மறுத்த குற்றத்திற்காக பெண்ணை கொலை செய்த கூட்டுறவு வங்கி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே வசித்து வருபவர் வேலுமணி. இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மகள் திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வருகிறார். மகன் திருப்பூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். வேலுமணி அதே பகுதியில் உள்ள கழிவுபஞ்சு குடோனில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
தினமும் வேலைக்குச் செல்லும் முன் தனது மகனை பேருந்தில் ஏற்றிவிட்டு செல்வார். அந்த வகையில் நேற்றைய தினமும் அவ்வாறு சென்ற வேலுமணியை அதே பகுதியைச் சேர்ந்த கூட்டுறவு வங்கி இயக்குனர் நாச்சிமுத்து என்பவர் வழிமறித்து தகராறு செய்தார். பின் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்.
இதில் வேலுமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தப்பியோடிய நாச்சிமுத்துவை அவிநாசி காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். அப்போது வெளியூருக்கு தப்பி செல்ல பேருந்து நிலையத்தில் நின்ற அவரை கைது செய்து விசாரிக்கையில். பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். அதில், நானும் வேலுமணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தோம். எனக்கு மனைவி இல்லை, அவளுக்கு கணவன் இல்லை இருவரும் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினேன்.
அதற்கு அவர் மறுத்தார். இருப்பினும் பரவாயில்லை தொடர்ந்து நெருங்கிப் பழகலாம் என்று கூறியபோது, மகனின் நலன் எண்ணி மறுப்பு தெரிவித்தார். இதனால் எனக்கு ஆத்திரம் வந்தது அரிவாளால் வெட்டிக் கொன்றேன் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கைதான அவரை காவல்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.