இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்யும் முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர். அதற்கு முன்பாக அதிபர் தன் குடும்பத்தினருடன் தப்பி ஓடி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அதிபரின் வீட்டில் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருக்கும் நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றை பயன்படுத்தியதும், அங்கேயே அமர்ந்து உணவு உண்ட புகைப்படங்களும் வெளியாகின. இதற்கிடையில் போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து சபாநாயகர் வரும் 13ஆம் தேதி அன்று அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்வார் என்று தெரிவித்திருந்தார். அதிபர் கோட்டபாய ராஜபக்சே இதற்கு முன்பே தெரிவித்திருந்தது போல ராஜினாமா முடிவை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி வரும் 13ஆம் தேதி அன்று கோட்டபாய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகி விடுவார்.