கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தது மட்டுமின்றி பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன் எடுத்து நடத்தினர். இந்நிலையில் கோரிக்கையை ஏற்ற ரெயில்வே நிர்வாகம், ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் நேற்று முதல் இயக்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று காலை 8.10 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஈரோடு- திருச்சி பயணிகள் ரெயில் புறப்பட்டது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே.என்.பாஷா தலைமையில் ஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சி.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் திருசெல்வம் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அரவிந்தராஜ், கனகராஜ், அன்பழகன், துணைத்தலைவர் பாஸ்கர் ராஜ், சேவாதள மாநகர் மாவட்ட தலைவர் முகமது யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.