இலங்கையில் வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிபர் மாளிகையை ஆக்கிரமித்தனர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள் அங்கேயே தங்கி தூங்கி விளையாடிய புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொழும்பு ரத்மாலான விமானப் படைத்தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் வரும் 20ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 13ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் ஜூலை 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், ஜூலை 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.