மனைவி கண் முன்னே பாறைக்குழியில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரியூர் சக்தி நகர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குப்புசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சுளாதேவி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வெள்ளகோவிலுக்கு தேங்காய் களத்தில் வேலை கேட்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதனையடுத்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது இழுப்பைக்கிணறு பாறைக்குழி அருகில் மோட்டார் சைக்கிளை குப்புசாமி நிறுத்தினார். அதன்பின் குப்புசாமி தனது மனைவியை இறக்கி விட்டு பாறைக்குழியில் மீன்பிடித்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது கால் தடுமாறி விழுந்த குப்புசாமி நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதனை அறிந்த மனைவி மஞ்சுளாதேவி தனது கணவரை ‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது குப்புசாமி நீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து அவர்கள் வெள்ளகோவில் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி இறந்த குப்புசாமியின் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.