மகன் மற்றும் உறவினரின் மோட்டார் சைக்கிளை தந்தை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடம்போடுவாழ்வு பகுதியில் ஓட்டுநரான பேச்சுமுத்து என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பேச்சுமுத்துவின் தந்தை முருகன் என்பவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது மனைவியான சண்முகதாயிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு முருகன் தொந்தரவு செய்துள்ளார். இதனை பேச்சுமுத்து தட்டி கேட்டபோது தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
மறுநாள் காலை முருகன் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேச்சிமுத்து மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோரின் மோட்டார் சைக்கிள்கள் மீது துணிகளை போட்டு தீ வைத்து எரித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேச்சிமுத்து தீயை அணைக்க முயற்சி செய்வதற்குள் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய முருகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.