நாசா மூலம் விண்வெளியில் ஏவப்பட்ட உலகின் மிகப் பெரிய சக்தி மற்றும் திறன்வாய்ந்த ‘ஜேம்ஸ்வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவிலுள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியன் 5 ராக்கெட் வாயிலாக சென்ற டிசம்பர் மாதம் 25ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப் பெரிய பட்ஜெட்டில் பல வருடங்களாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இத்தொலைநோக்கியை உருவாக்கி இருக்கின்றனர்.
இது நிலவிலிருந்து 3 மடங்கு தொலைவுக்கு சென்று சூரியனை சுற்றியவாறு தன் ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். இதனிடையில் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திவாய்ந்த இத்தொலைநோக்கி நவீன மனிதகுலம் முன்பு அறிந்திடாத பல்வேறு அரிய தகவல்களை அடுத்த சில வருடங்களுக்கு அளிக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி வாயிலாக எடுத்த படங்களின் தொகுப்பானது நாளை வெளியிடயிருக்கிறது.
அதற்கு முன்னதாக அதன்முலம் எடுக்கப்பட்ட முதல் வண்ணப் படத்தை நாசா வெளியிட்டு உள்ளது. இதை அமெரிக்க அதிபர் ஜோபைடன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாசா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இன்று வரை பிரபஞ்சத்தின் ஆழமான மற்றும் கூர்மையான அகச் சிவப்பு காட்சி, அது நமக்கு கண்ணுக்கு தெரியாத விண் மீன் திரள்களைக் காட்டுகிறது. தொலைநோக்கி வாயிலாக எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு ஜீலை 12 இன்று வெளியிடப்படும்” என பதிவிட்டுள்ளது.