ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் பொருட்களை மக்களுக்கு ஒரே மாதிரியாக விநியோகம் செய்வதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வகிக்கின்றது. மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவது போல ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவதில்லை. அரசு நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கக்கோரி பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. போராட்டமும் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் கூட்டுறவுத்துறை நிறுத்தி வைத்திருந்தது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் ரேஷன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடை பணியாளர்களின் விரிவான எழுத்து பூர்வமான கோரிக்கைகளை ஜூலை 14ஆம் தேதிக்குள் கூட்டுறவுத்துறை குழுவினரிடம் சமர்ப்பிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளது.