இந்தியாவில் இருந்து பிரான்சுக்கு போக முயன்ற ஒரு தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய போலீசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது பிஸ்வஜித்தாஸ், ரிங்குதாஸ் எனும் அந்த தம்பதியரிடம் பிரெஞ்சு பாஸ்போர்ட்களும், இந்திய பாஸ்போர்ட்களும் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரெஞ்சு பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் சர்க்கார், ரிங்கு சர்க்கார் எனவும் இந்திய பாஸ்போர்ட்டில் பிஸ்வஜித் தாஸ், ரிங்கு தாஸ் எனவும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. அத்துடன் அவர்களை சோதனையிட்ட போது பங்களாதேஷ் நாட்டின் குடியுரிமை ஆவணங்களும் இருந்துள்ளது.
விடயம் என்னவெனில் அவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தியக்குடிமக்கள் ஆவார்கள். கடந்த 2018 ஆம் வருடம் தம்பதியர் கத்தாருக்குச் சென்றிருந்தார்களாம். இந்நிலையில் அங்கு ஒரு ஏஜண்ட் அவர்களுக்குத் தான் பிரான்சில் புகலிடம் பெற்றுத் தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதனால் இவர்களும் அதற்கு சம்மதித்தனர். ஆனால் பங்களாதேஷ் நாட்டவர்கள் எனில் எளிதாக பிரான்சில் அடைக்கலம் கிடைக்கும் என ஏஜண்ட் கூறி இருக்கிறார். அதற்கும் இவர்கள் சம்மதிக்க 8 -9 லட்ச ரூபாய் செலுத்தி அனைத்து ஏற்பாடும் செய்து, தம்பதியர் தற்போது பங்களாதேஷ் குடிமக்கள் என்ற போர்வையில் பிரான்சில் வாழ்ந்து வருகிறார்கள்.
இதனிடையில் இந்தியாவில் ரிங்குவின் தந்தை இறந்து போக, அவரது இறுதிச்சடங்குகளை செய்வதற்காக தங்கள் மகளையும் அழைத்துக் கொண்டு பிரான்சில் இருந்து இந்தியா வந்த தம்பதியர், மீண்டுமாக பிரான்ஸ் திரும்ப முயன்றபோது வசமாக சிக்கிக் கொண்டார்கள். இதற்கு முன்னதாக இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிக்கும் இதே தம்பதியர், தற்போது பிரான்ஸ் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிக்க முயற்சிக்கும்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆகவே விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வர தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தம்பதியர் மீது மோசடி, ஆவண மோசடி முதலான வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பங்களாதேஷ் தூதரகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையில் தொடர்ந்து தம்பதியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.