பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மகாலிங்கபுரம் நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வழியாக சென்ற நகராட்சி தற்காலிக பணியாளர் வனிதா(35) மற்றும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த நந்தினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் 2 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சார உயர அழுத்தம் மின் கம்பியில் மரம் விழுந்தது.
இதனால் மின் கம்பிகள் திடீரென அறுந்தது. மின்கம்பம் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் வந்து பார்வையிட்டார். அவர் அதிகாரிகளை வரவழைத்து உடனடியாக மரத்தை வெட்டி அப்புறப்படுத்த உத்தரவிட்டார்